ஆசிரியர் தொல்காப்பியரால் பன்னெடுங்காலம் தொல் தமிழ் மாந்த கூட்டம் தன் பட்டறிவாலும், பழந்தமிழ் குடிகளின் முறைமையான பேரறிவாலும் பரம்பரை பரம்பரையாக தலைமுறைகள் பலவாக கடத்தப்பட்ட அறம் கொண்ட தொல் தமிழர் மரபு வழுவாது காக்கும் பொருட்டு, முந்து நூல்கள் கண்டு அவற்றை முறைப்பட எண்ணி மயங்கா மரபின் எழுத்து முறைக்காட்டி தொகுத்தெழுதிய தமிழிலக்கண நூல் தொல்காப்பியம். இந்நூலின் காலம் இன்னது என்று சொல்ல இயலாத அளவிற்கு தொன்மை கொண்ட முது நூல், உறுதியாக கிமு 1500 யிற்கு முற்பட்டது அறுதியிட்டு கூறுவதற்கான சான்றுகளை தன்னகத்தே கொண்ட பெருநூல். தமிழ் மொழிக்கான இலக்கணத்தை மட்டுமல்லாமல் தமிழர் வாழ்வியலுக்கான இலக்கணத்தையே கொண்ட மறை நூல் அது. அன்று ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்று தொல் தமிழ் மாந்தன் தன் நாவை அசைத்து ஆதி தமிழின் அடியோசையை ஒலித்த நாள் தொடங்கி தமிழ் எழுத்தை உச்சரிக்கும் கடைசி நா உள்ளளவும் முந்நூல் கண்ட தொல்காப்பியம் காத்து இயம்பும் மரபு தமிழோடு நிலைத்தே இருக்கும். தொல்காப்பியம் காட்டும் தொல் தமிழரின் தமிழ் மரபை விட்டு தமிழ் நீங்குமா? அது உடலானது உயிராற்றலை இழப்பதற்கன்றோ நிகர்!
தொல்காப்பியம் காட்டும் தொல் தமிழெழுத்துகள்:
அடிவயற்றில் தோன்றுகின்ற காற்று, அங்கிருந்து கிளர்ந்து தலை, கழுத்து, நெஞ்சு என்ற இடங்களில் நிலைகொண்டு, பல், இதழ், நா, மூக்கு, மேல்வாய் என்ற உறுப்புகளோடு இயைந்து எண்வகை நிலைகளில் வெவ்வேறு எழுத்தொலிகளாக வெளிப்படும்; அந்த எழுத்தொலிகளே கண்ணுக்குப் புலப்படா வளி எழுத்தொலியாகி, இறுதியில் கண்ணுக்குத் தெரியும் எழுத்துருக்களைப் பெறுகின்ற இயங்கியலைக் கூறும் கீழ் வரும் தொல்காப்பிய நூற்பாவானது எழுத்து பிறப்பியலை விளக்கும் உலகின் மீமிக பண்டைய பாடம் இதுவே.
உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்படத் தெரியும் காட்சியான
இவ்வாறு ஓசையெழுப்ப பெற்று செவிப்புலனாகும் ஒலியெழுத்தானது அதற்கான வடிவம் பெற்று எழுத பெறும் எழுத்து வடிவமாக இருநிலை தன்மை கொண்டாக எழுத்தை அன்றே தமிழர் நுண்ணறிந்து வைத்திப்பது வியப்பே. எழுத்து இனைத் தென்றல், இன்ன பெயர் என்றல், இன்ன முறைமைய என்றல், இன்ன புணர்ச்சிய என்றல் என திறம்பட விரித்துணர்த்தி இதனோடு ஆசிரியர் தாம் உணர்ந்தாராயினும் பலபட விரித்துணர்த்தலருமையின் வடிவும், தன்மையும் சுருங்க சொல்லி எழுதப்பட்டது தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம்.
தமிழ் எழுத்திலக்கணத்தை உரைக்கும் தொல்காப்பியத்தின் முதல் அதிகாரமான எழுத்திதகாரத்தின் முதல் இயலான நூல் மரபு தமிழெழுத்திகளில் உண்மைத் தன்மை, குறைவு, கூட்டம், பிரிவு, மயக்கம், மொழியாக்கம், நிலை, இனம், ஒன்று பலவாதல், திரிந்ததன் திரிபு அது என்றல், பிறிதென்றல், அதுவும் பிறிது என்றல், நிலையிற்றென்றல், நிலையாதென்றல், நிலையிற்றும் நிலையாதும் என்றல் என பலவற்றை விளக்குகிறது.
தமிழ் எழுத்துகள் பற்றிய முதற் நூற்பாவில் ஆசிரியர் ‘எழுத்தென படுப’ என்று சொல்லி தமிழின் முதலெழுத்துகளை கூறுகிறார்,
எழுத்து எனப்படுப
அகரம் முதல்
னகர இறுவாய் முப்பஃது என்ப
சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. (தொல் 1)
அதாவது அகரம் முதல் (அ முதலான உயிர் எழுத்து தொடங்கி) னகரம் இறுவாய் (கடைசி மெய் எழுத்தான ன் வரை) உள்ளது முப்பதும் அவற்றை சார்ந்து வரும் சார்பெழுத்துகள் மூன்றுமாக மொத்தம் முப்பத்து மூன்றும் முதலெழுத்துகளாகும் என்கிறார் ஆசிரியர். இதில் எழுத்தின் எண்ணிக்கை, வகை மற்றும் இன்னது பெயர் என்று கூறுகிறார். தமிழ் எழுத்துகள் ஒவ்வொன்றிக்கும் தனித்தனிப் பெயருண்டு இன்று நாம் உயிரெழுத்தை படிக்கும் போது அனா, ஆவனா, இனா, ஈயன்னா என்று எழுத்தின் பெயராக கூறுவது பின்னாளில் திரிந்தவை. அவற்றை முறையே உயிருக்கு அகரம், ஆகாரம், இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐகாரம், ஒகரம், ஓகாரம், ஔகாரம் என்றும். மெய்க்கு ககரம், ஙகரம், சகரம், ஞகரம், டகரம், ணகரம், தகரம், நகரம், பகரம், மகரம், யகரம், ரகரம், லகரம், வகரம், ழகரம், ளகரம், றகரம், னகரம் என்றும் வழங்குவதே மரபு. உயிர் மெய் என்று வரும் போது ‘க’ என்றால் ககர அகரம், ‘கா’ என்றால் ககர ஆகாரம், ‘கி’ என்றால் ககர இகரம் என்று இவ்வாறு அவ்வுயிர்மெய்யின் மெய் பெயரை முன்னரும் உயிர் பெயரை பின்னரும் வழங்குவது மரபு. ஆசிரியர் கூறும் 33 முதலெழுத்துகளில் உள்ள உயிரெழுத்துகளை அதன் ஒலிப்பின் மாத்திரை அளவு கொண்டு குற்றெழுத்து என்றும், நெட்டெழுத்து என்றும் பிரிப்பர். மாத்திரை என்றால் கண் இமைக்கும் அல்லது கை நொடிக்கும் நேர அளவு ஆகும் . அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு மாத்திரை அளவும், ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஔ ஆகிய ஏழு நெட்டெழுத்துகளும் இரண்டு மாத்திரை அளவும் கொண்டது என்றும் மூன்று மாத்திரைக் கொண்ட ஓர் எழுத்து தமிழில் இல்லை நீட்டம் வேண்டும் என்றால் அவ்வளவு உடைய எழுத்தை கூட்டியெழுதலாம் என்று தமிழாய்ந்தோர் நிறுவியதை கூறுகிறார்.
அவற்றுள்,
அ இ உ
எ ஒ என்னும் அப் பால் ஐந்தும்
ஓர் அளபு இசைக்கும் குற்றெழுத்து என்ப. (தொல் 3)
ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப் பால் ஏழும்
ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப. (தொல் 4)
உயிர் எழுத்துகளை இன்னவேறு பின் வருமாறு ஆசிரியர் தொல்காப்பியனார் குறிக்கிறார். ஆனால் கல்வெட்டுகளில் ஐகாரத்திற்கும் ஔகாரத்திற்குமான வரிவடிவம் கிட்டவில்லை, அதனால் அவ்வெழுத்து அன்று இல்லை என்று பொருளில்லை. ஐகாரமும் ஔகாரமும் கூட்டெழுத்துகள் என்பதை காட்டும் வகையில்
அகர இகரம் ஐகாரம் ஆகும்
அகர உகரம் ஔகாரம் ஆகும்
எனவே அஇ சேர்ந்து ஐகாரமாகவும், அஉ சேர்ந்து ஔகாரமாகவும் அக்காலத்தில் எழுதியிருக்கலாம். அதேப்போல் எழுத்து போலி என்னும் தலைப்பில் அய் என்று வருவது ஐகாரத்திற்கான போலி வடிவம் என்று உணர்த்துகிறார் ஆசிரியர்,
அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.
உயிரெழுத்து:
அகரம் தொடங்கி ஔகாரம் ஈராய் உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் உயரெழுத்துகள் எனப்படும். இவற்றுள் அ,இ,உ,எ,ஒ என்னும் ஐந்தும் ஓர் அளபு இசைக்கும் குற்று எழுத்தாகும், ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ என்னும் ஏழும் ஈர் அளபு இசைக்கும் நெட்டெழுத்தாகும்.
மெய்யெழுத்து:
கரகம் தொடங்கி னகரம் முடிய உள்ள 18 எழுத்துகள் மெய்யெழுத்துகளாகும். அவற்றை ஆசிரியர் பின்வருமாறு காட்டுகிறார். மேலும் மெய்யெழுத்தானது தன் வரிவோடு புள்ளி பெற்றும் என்று விளக்குகிறார்.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். (தொல் 15)
மெய்யெழுத்தானது அரை மாத்திரை அளவை உடையது என்று “மெய்யின் அளபே அரை என மொழிப” அதன் அளவை குறிக்கிறார்.
உயிர்மெய்:
புள்ளி இல்லா எல்லா மெய்யும்
உரு உரு ஆகி அகரமொடு உயிர்த்தலும்
ஏனை உயிரொடு உருவு திரிந்து உயிர்த்தலும்
ஆயீர் இயல உயிர்த்தல் ஆறே. (தொல் 17)
இவ்வாறு உயிர்மெய் எழுத்தின் வரிவடித்தின் குறிப்பிடுகையில் புள்ளியில்லாத மெய்யின் வடிவமே அகரமேறிய மெயான முதல் உயிர்மெய் வரிசையின் வடிவமாகும். ஏனைய உயிர்களோடு சேரும் போது வரிவடிவத்தில் பல்வேறு மாற்றத்தினை காட்டுகிறது என்கிறார்.